சென்னை:தமிழ்நாட்டில் இன்று 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இனிப்புகளை வழங்கி வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “2019ஆம் ஆண்டு மார்ச் 24 முதல் பள்ளிகள் மூடப்பட்டதால் 600 நாள்களாக இளம் சிறார்களின் கல்வி மறுக்கப்பட்டு, அவர்களுக்கு மனவுளைச்சல் தரும் விதமாக அமைந்துவிட்டது. முதலமைச்சராக ஸ்டாலின் வந்த பிறகு கரோனாவை கட்டுப்படுத்த 5 மாதங்களாக ஏராளமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்துவதில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தமிழ்நாட்டில் இதுவரை 71 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசியும், 31 விழுக்காடு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிட்டது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையை 100 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பு மூலம் மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது. காலை மடுவின்கரையில் முதலமைச்சர் மாணவர்களை வரவேற்றார். முதலமைச்சர் மாணவர்களை வரவேற்றது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வாகும்.
தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டும் அனுமதி
இங்கு 8ஆம் வகுப்பில் 20 மாணவிகள் பயில்கின்றனர். அவர்களிடம் பொது அறிவுக் கேள்வி கேட்டு பரிசுகளை வழங்கினோம். இதில் 20 பேரும் பரிசு பெற்றனர். எனவே மாணவர்களின் கல்வி அறிவு குறையவில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. தடுப்பூசி செலுத்திய ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூரில் நேற்று இரு மாணவிகளுக்கு கரோனா கண்டறியப்பட்டு அவர்களைச் சார்ந்த 115 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, 13 மாணவர்களுக்கு தொற்று உறுதியானது. அவர்கள் நலமாக இருப்பதால் வீடுகளிலேய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அடுத்தகட்டமாக மாணவர்களின் பெற்றோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என கண்காணிக்கப்படும்.
தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கையை 100 விழுக்காடாக உயர்த்த நடவடிக்கை - அமைச்சர் மா. சு மாணவர்களே தங்களது பெற்றோரிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் நிலை ஏற்படும். 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி தயாராக உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அதற்கான விலை தொடர்பாக ஒன்றிய சுகாதாரத்துறையிடம் பேசி வருகிறோம்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் தளர்வுகளுக்கு வாய்ப்பில்லை
மொத்தமாக 10 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. மெகா தடுப்பூசி முகாம் காரணமாக வார நாள்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே நாளை (நவ.02) செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு ஊராட்சிகளுக்கு சென்று தடுப்பூசி பணியை பார்வையிடுகிறேன். கேரள எல்லைக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வாய்ப்பு இல்லை. கரோனா, நிஃபா உள்பட பல தொற்றுகள் அந்த மாநிலத்தில் தீவிரமாக உள்ளன. டெங்கு பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாட்டில் 400ஆக உள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்துபவர்களின் வசதிக்காக ஞாயிறுக்கிழமை இல்லாமல் பிற நாளில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பண்டிகைக் காலம், 14 மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு என்பதையும் தாண்டி முகாமில் அதிகளவில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அடுத்த வாரம் தடுப்பூசி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:கோயம்பேடு மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர்: மகிழ்ச்சியில் சென்னை மக்கள்!