சென்னை: ராணி மேரி கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் நடத்தும் கரோனா விழிப்புணர்வு மற்றும் சிறப்பு தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ராணிமேரி கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பு தடுப்பூசி முகாமினை தொடங்கிய பிறகு மாணவர்கள் நடத்திய கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "ராணி மேரி கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில், இன்னும் 900 மாணவிகள் மட்டுமே தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது.
கல்லூரி மாணவ - மாணவிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அரசின் உத்தரவை, ராணி மேரி கல்லூரி முறையாகப் பின்பற்றி, தங்களுடைய பணியை செய்து வருகிறது.
தமிழ்நாட்டிலேயே 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய கல்லூரியில் ராணி மேரி கல்லூரி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கும் பாதிப்பு
நைஜீரியாவில் இருந்து வந்தவருக்கு மரபணு மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய குடும்பத்தினரையும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நைஜீரியாவில் இருந்து வந்தவரால் அவருடைய குடும்பத்தினர் ஆறு பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார்.
அதனால் தான் அதிகளவு பாதிப்பு ஏற்படவில்லை. நைஜீரியாவில் இருந்து வந்தவர், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மரபணு பரிசோதனை முடிவுகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என பெங்களூரு ஆய்வகத்திடம் கேட்டுள்ளோம். கடந்த 10 நாள்களில் தமிழ்நாட்டிலுள்ள விமான நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்ததில் 40 நபர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.