சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 'தேசிய பிளாஸ்டிக் அறிவை சிகிச்சை தினம்' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு இதயவியல் கண்காட்சி மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட கருத்தரங்கை திறந்து வைத்தார்.
பின்னர் இவ்விழாவில் உரையாற்றிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "ஸ்டான்லி மருத்துவமனையில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு ஆஞ்சியோ அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அரசின் காப்பீட்டுத்திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். தேசிய ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை தினத்தை முன்னிட்டு இன்று(ஜூலை.20) நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த சிகிச்சை மக்களுக்கு மேலும் பயனளிக்க வேண்டும்’ எனப் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”நீட் தேர்வைப் பொறுத்தவரை விலக்கு பெற வேண்டும் என்பது தான் தமிழ்நாடு அரசின் கொள்கை. இரண்டு முறை சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம். இதுதொடர்பாக மத்திய அரசு கடந்த மாதம் 21 மற்றும் 26ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு பதில் அனுப்பியுள்ளது.
ஆனால், பதில் கடிதம் கடந்த 5ஆம் தேதி தான் ஆளுநர் மாளிகை மூலம் கிடைக்கப்பெற்றது. மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பியுள்ள குறிப்பில், இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளதா?, சட்ட மசோதா மத்திய அரசு வரம்புக்குள் வருகிறதா? நீட் தகுதி அடிப்படையிலான தேர்வு என்றும்; வரலாற்றுச் சீர்திருத்தங்களை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் நீட் அரசியலமைப்புச்சட்டத்தை மீறுகிறதா? தேசிய கல்விக்கொள்கைக்கு முரணானதா? நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறதா? நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெற மாநில சட்ட வரம்புக்குள் வருமா? தேசிய ஹோமியோபதி ஆணையச்சட்டம், தேசிய மருத்துவ ஆணைய சட்டங்களைப் பாதிக்கிறதா? இதற்கான அதிகாரம் மத்திய அரசின் வரம்பில் உள்ளதா? என்ற கேள்விகளின் அடிப்படையில் மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு குறிப்புகள் அனுப்பி உள்ளன’ எனத் தெரிவித்தார்.