சென்னை:இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் குறித்து சில அரசியல்வாதிகள் தேவையில்லாத பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கத்தேவையில்லை என மருத்துவர் குழு கூறியுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்மா தலைமையிலான குழுவினருடன் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் அல்ட்ராசோனா கிராபி கருவி ஆகிய பயிற்சிகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (செப்.19) கையெழுத்தானது.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேகாலயா சுகாதார துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் மேகாலாயவில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு தமிழ்நாட்டின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாடுகளை இன்றும், நாளையும் நேரடியாக பார்வையிட உள்ளனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: மேகாலயா சுகாதாரத்துறையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி மற்றும் அல்ட்ராசோனாகிராபி பயிற்சி, மயக்கவியல் சிகிச்சை பயிற்சிகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை வழங்க தமிழ்நாடு அரசும், மேகாலயா அரசும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.
மேகாலயா செல்லும் சித்த மருத்துவ குழு: மேகாலயாவில் இயற்கை வைத்தியத்திற்கான மூலிகை செடிகள் ஏராளமாக உள்ளன. எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இந்திய மருத்துவத்திற்கு தேவையான வசதிகள் என்னென்ன தேவை என கண்டறிந்து மூலிகை செடிகளின் பயன்பாட்டை தமிழ்நாடு அரசு பயன்படுத்த உள்ளது. விரைவில் தமிழ்நாடு அரசின் சித்த மருத்துவ குழுவினர் மேகாலயா சென்று பார்வையிட உள்ளனர்.
மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எச்1 என்1 காய்ச்சல் (H1N1 influenza) அதிகளவில் பரவி வருவதாக வந்த தகவலைத்தொடர்ந்து, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காய்ச்சல் வார்டை பார்வையிட்டோம். பருவமழை காலங்களில் காய்ச்சல் சதவீதம் அதிகரிப்பது வழக்கம். சாதாரண காலங்களில் 1 சதவீதம் இருக்கும் பருவமழை காலங்களில் 1.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.