சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் விடுதியில் கர்ப்பிணிகளுக்கான முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் குறித்த அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (மே 27) ஆலோசனை நடத்தினார். கர்ப்பிணி தாய்மார்களுக்கான PICME 2.0 இணையதளத்தில் கர்ப்பிணியான விவரத்தை சுயமாக பதிவுசெய்து, அதற்கான எண் பெறும் வசதியையும் மமா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து கர்ப்பிணிகளுக்கான அட்டைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அமைச்சர், 'குழந்தைகளுக்கு போலியோ, தட்டம்மை, ரூபெல்லா நோய் மற்றும் மூளைக்காய்ச்சல் நிமோனியா காய்ச்சல் ஆகியவற்றிற்கான தடுப்பூசிகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு வேண்டிய 11 வகையான தடுப்பூசிகள் 12 வகையான நோய்களுக்கு செலுத்தப்படுகின்றன.
குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதில் 2ஆம் இடம்:தடுப்பூசிகள் செலுத்தும் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு 9.39 லட்சம் குழந்தைகளுக்கும், 10.21 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு செலுத்தப்படுகிறது. தற்பொழுது தமிழ்நாட்டில் 90.04 % பேர் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இது குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட பட்டியலில், பெரிய மாநிலங்களில் குழந்தைகளின் மரணங்களைத் தடுப்பதில் தமிழ்நாடு 2 ஆம் இடத்திலும், கேரளா முதல் இடத்திலும் இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 1,000 குழந்தைகள் பிறந்தால் இறப்பு 15 என இருந்தது, தற்பொழுது அது 13 ஆகக் குறைந்துள்ளது.
அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் அரசு மருத்துவமனைகள்: தமிழ்நாட்டில் மாதந்தோறும் அரசு மருத்துவமனைகளில் 60% பேர் மட்டுமே மகப்பேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை, அடுத்த 2 ஆண்டுகளில் 75% உயர வேண்டும் என்பது சு இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதற்கு அரசு மருத்துவ சேவைகளையும், அதன் கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டியது அவசியம்.
தடுப்பூசி - மீண்டும் ஒரு வாய்ப்பு: அதன்படியே அரசு மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் 70.43 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீண்டும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் சேர்த்து ஒரு கோடியே 10 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு பதவி ஏற்கும்போது 25,000 ஆக தினசரி இருந்த கரோனா பாதிப்பு, 35 ஆயிரத்தை கடந்தது. இதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையால் கரோனா தொற்று தினசரி 100-க்குள் பதிவாகி வருகிறது. சென்னை ஐஐடியில் கரோனா தொற்று பாதித்தது. தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. எனவே, தடுப்பூசியை தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
ஜூன் 12-ல் 'மெகா தடுப்பூசி முகாம்': தமிழ்நாட்டில் 1.22 கோடி பேர் 2ஆம் தவணை தடுப்பூசியும், 43 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்தாமல் உள்ளனர்; இவர்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். மாதம் ஒரு தடுப்பூசி முகாம் நடத்துவதற்காக 1.3 கோடி டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. வரும் ஜூன் 12ஆம் தேதி "மெகா தடுப்பூசி முகாம்" நடத்தப்பட உள்ளது. கரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் மக்களுக்கான அச்சம் குறைந்துள்ளது. இருந்தாலும் கரோனா தடுப்பூசி போடாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்த வேண்டும். தொற்று நோய் சவாலான ஒன்றாக உள்ளது, இதனை கட்டுப்படுத்த, தடுப்பூசி கண்டறியும் பணிகள் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது' என்றார்.
கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், '11 வகையான தடுப்பூசிகள் மூலம் 12 நோய்களுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. 10.21 லட்சம் கர்ப்பிணி தாய்மார்களும், 9 லட்சம் குழந்தைகளும் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற்று வருகின்றனர். 76.1 % ஆக இருந்த தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை 90.4% ஆக உயர்ந்துள்ளது. 1,10,28,046 பேருக்கு "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் மூலம் மருத்துகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுவரை இத்திட்டத்தின் மூலம் 70 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் அதிகமான மகப்பேறு சேவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இருந்தாலும் 60% ஆக உள்ள எண்ணிக்கையை 75% ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிசு மரணம் இல்லாத மாநிலம்:1000 மகப்பேறில் 15 சிசுக்கள் உயிரிழப்பு என்றிருந்த எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது. சிசு உயிரிழப்பு குறைவாக உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பெற்றுள்ளது. அதில், கேரளா முதலிடம் பெற்றுள்ளது. விரைவில், சிசு மரணம் இல்லாத மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு' என தெரிவித்தார்.
இதையும் படிங்க: Chessable Masters Finals: 2ஆம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா - பரிசுத்தொகை எவ்வளவு?