தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்டோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நாள்தோறும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
குறிப்பாக பட்டியலின, பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கிவருகிறார். மேலும் பொதுமக்கள் மத்தியில் கரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகிறார்.
இவர் சமீபத்தில் பொதுமக்களைச் சந்தித்தபோது, அவரிடம் நரிக்குறவர் பெண் ஒருவர் உதவி வேண்டி மனு கொடுத்தார். அதில், "நான் +2 வரை படிச்சிருக்கேன். எனக்கு ஒரு தையல் மெஷின் தாங்க" எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
நரிக்குறவர் பெண்ணுக்கு அமைச்சர் சிவசங்கர் உதவி அந்த மனுவை அப்போதே வாங்கி படித்த அமைச்சர், "தையல் மெஷின் வாங்கித்தாரேன். ஆனால், அதையே நம்பினால், காலம் முழுவதும் தையல் மெஷினே வாழ்க்கையாகிடும். அதனால் மேற்படிப்புக்கு உதவியும் செய்கிறேன். நன்றாகப் படித்து நாலு பேருக்கு முன்மாதிரியாக இரு" என்று தெரிவித்தார். மேலும், அந்தப் பெண்ணுக்குத் தேவையான உதவிகளை செய்ய தனது உதவியாளரிடம் அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்தப் பேச்சும் செயலும் பலரது பாராட்டை பெற்றுவருகிறது.