சென்னை:இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா, “வள்ளலார் – 200” என்ற தலைப்பில் 52 வாரங்கள் சிறப்பாக நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். அதற்குண்டான ஆக்கபூர்வமான பணிகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றது. முதலமைச்சரிடம் வள்ளலாரின் சர்வதேச மைய வரைபடத்திற்கான ஒப்புதலை பெற்றபின், விரைவாக அப்பணிகள் துவக்கப்படும்.
வள்ளலாருக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் அவர் வருவித்த நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அக்டோபர் 5 ஆம் தேதியை தனிப்பெருங்கருணை நாள் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற பேரவையில், வள்ளலார் இந்த உலகிற்கு வருவித்த நாளின் 200 வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும், அவர் தர்மசாலை தொடங்கிய 156 ஆண்டு கொண்டாடுகின்ற வகையிலும், அதே போல் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 வது ஆண்டை கொண்டாடுகின்ற வகையிலும் முப்பெரும் விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
வள்ளலாருக்கு எந்த ஆட்சியிலும் செய்யாத சிறப்பினை செய்திடும் வகையில், முதலமைச்சர் “வள்ளலார் – 200” என்ற இலட்சினை மற்றும் தபால் உறையினை வெளியிட்டு, ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வினை முப்பெரும் விழாவில் தொடங்கி வைக்கிறார்.