சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தில் அமைந்துள்ள மின்னகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று (ஜூன்19) ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, 'மின்னகம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு. மின் நுகர்வோர் குறைகளைப் போக்க கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி முதலமைச்சர் மின்னகம் நுகர்வோர் சேவையைத் தொடங்கி வைத்தார். மின்னகம் நுகர்வோர் சேவை தொடங்கியதில் இருந்து ஓராண்டில் 9.16 லட்சம் புகார்களில் 9.11 லட்சம் புகார்களுக்கு 99.45% வரை தீர்வு காணப்பட்டது.
குறிப்பாக, ஸ்காட்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு 5 பேர் கொண்ட குழுவாக கடலில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி சாத்தியம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள 5 நாள்கள் வெளிநாட்டுப் பயணம் இன்று செல்ல உள்ளேன். சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கும் தீர்வு காணப்பட்டு வருகிறது. மின்னகம் செயலி மூலம் ஒரே சமயத்தில் 1 லட்சம் பேர் ஒரே சமயம் தொடர்பு கொண்டாலும் தீர்வு காண தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
காலிப் பணியிடங்கள்: வட சென்னை அனல் மின் நிலையத்தில் மூன்றாம் நிலைப் பணிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். மின் துறையில் 50 ஆயிரத்திற்கும் மேலான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அனைவரும் சமம் என்ற முறையில் நிகழ்காலத்திற்கு ஏற்பவும் நிதி நிலைக்கு ஏற்பவும் அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 6220 மெகாவாட் கூடுதல் நிறுவனத்திறன் மின்வாரியத்துடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.