காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே சீட்டணசேரியில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ காலீஸ்வரர் சுவாமி திருக்கோவில், 82 ஆண்டுகளுக்கு பிறகு 80 லட்சம் ரூபாய் மதிப்பில், 33 அடி உயரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட திருத்தேருக்கு கும்பாபிஷேகம் மற்றும் வெள்ளோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்று வெள்ளோட்டத்தினை கொடியசைத்தும், திருத்தேரை வடம் பிடித்து இழுத்தும் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு இதைத் தொடர்ந்து, சாத்தனஞ்சேரியில் உள்ள அருள்மிகு கற்பகாம்பாள் உடனுரை கைலாச நாதர் திருக்கோயிலில், உழவார பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சீருடைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் 1,000 கோவில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்றும், 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருக்கோவிலில் ஒரு கால பூஜை கூட நடைபெறாமல், நிதி இல்லாமல் இருக்கும் கோவில்களை, அருகாமையில் உள்ள அதிக வருவாய் உள்ள கோவில்களுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தேர்வு நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை உறுதி