சென்னை:வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயில் நுழைவு வாயிலில் இருந்த பூஜை பொருட்கள், மலர் மாலைகள் விற்பனை கடைகளை அகற்றி, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக மாற்று இடம் வழங்கி அந்த கடைகளை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் கோயிலில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார்.
வடபழனி முருகன் கோயிலில் விரைவில் குடமுழுக்கு
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “ஆதிமூலப்பெருமாள் கோயில் நுழைவு வாயிலிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு இந்து சமய அறநிலையத்துறைக்கு அதிகாரம் இருந்தாலும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக 8 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிகமாக மாற்று இடத்தில் கடைகள் அமைத்துக்கொடுத்து தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
வடபழனி முருகன் கோயில் குடமுழுக்கு பனிகள் இரண்டு வருடங்களாக நடைபெற்று வருகிறது. வடபழனி முருகன் கோயிலில் நவம்பர் மாதத்திற்குள் குடமுழுக்கு நடத்தப்படும். வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக திருமண மண்டபங்கள், மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.