சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக ரூபாய் 18 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள காற்று மூலம் குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நல்ல முயற்சிகள் எடுக்கக்கூடிய பணிகள் நடந்தேறுவதை புதிதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த அரசு செய்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்க முடியாது. அந்த வகையில் கோயில்களில் முடிந்த அளவிற்கு கழிப்பிட வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கோயிலினுடைய தூய்மை, வருகின்ற பக்தர்களிடம் சிறந்த முறையில் அன்பாக பேசுகின்ற வகையில் பணியாளர்களுக்கு பயிற்சி ஆகியவற்றை முன்னிறுத்தி இந்து சமய அறநிலையத்துறையில் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பணிகள் சிறப்போடு நடைபெற்று வருகின்றன.
அதில் ஒரு முயற்சியாக மயிலாப்பூர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர், துறையின் முதன்மை செயலாளர், கோயில் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் முதலமைச்சர் தலைமையில் அமைந்திருக்கின்ற தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக இருக்கின்ற மல்லிகார்ஜுனன் சந்தானகிருஷ்ணன் சீரிய முயற்சியால் மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் காற்றிலிருந்து ஈரப்பதத்தை பெற்று அதை பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீராக மாற்றி கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற ஒரு இயந்திரத்தை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம்.