சென்னை: தமிழ்நாட்டில் 14வது மெகா தடுப்பூசி முகாம் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இன்று 14வது மெகா தடுப்பூசி முகாம் மூலம் 20 லட்சம் 45ஆயிரத்து 347 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதில், முதல் தவணை ஆறு லட்சத்து 81 ஆயிரத்து 346 பேரும், இரண்டாவது தவணை 13 லட்சத்து 64 ஆயிரத்து 001 பேரும் செலுத்தியுள்ளதாகக் கூறினார்.
விமானநிலையங்களில் கண்காணிப்பு
இதுவரை மொத்தம் ஏழு கோடியே 74 லட்சத்து 53 ஆயிரத்து 917 பேர் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். முதல் தவணை 83.48%, இரண்டாவது தவணை 51.31% பேரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேலும், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் அதிக நோய்ப் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வருபவர்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறோம். இதுவரை அதிக நோய்ப் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வந்த 10 ஆயிரத்து 5 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் இல்லை
நேற்று டிச.11 ஆம் தேதியின் படி, 2,207 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிங்கப்பூரிலிருந்து வந்த இரண்டு பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 19 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளதில், அனைவருக்கும் டெல்டா வைரஸ் மட்டுமே உள்ளது. மேலும், அமைச்சர் இதுவரை தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்படவில்லை என்றார்.
தினசரி 3 லட்சம் தடுப்பூசிகள்
பொது இடங்களில் கூடுபவர்கள், விதிமுறைகளை கடைப்பிடிக்கத் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த மே 6ஆம் தேதிக்கு முன்னர் தடுப்பூசி செயல்பாடு, நாள்தோறும் 60 ஆயிரத்திலிருந்து, தற்போது தினசரி சராசரியாகத் தடுப்பூசி என்பது 3லட்சம் வரை வருகிறது. மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். தடுப்பூசி செலுத்துவதில் விரைவில் தேசிய சராசரியைத் தமிழ்நாடு எட்டும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, எதிர்ப்புச் சக்தி என்பது பெரும்பாலான மாவட்டங்களில் 60% மேல் உள்ளது. 10மாவட்டங்களில் 80% மேல் உள்ளது. 603 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
இதையும் படிங்க: கரோனா மூன்றாவது அலை - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!