சென்னை, திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட அயனாவரத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மாநகராட்சி களப்பணியாளர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சித்தா, ஹோமியோபதி மருந்துகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா தொற்று அதிகமாகப் பரவி வரும் சூழ்நிலையில் திருவிக நகர் மண்டலத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
மாநகராட்சி களப் பணியாளர்கள் தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் திருவிக நகர் மண்டலத்தில் மக்களின் இல்லங்களுக்கே சென்று ஆய்வு செய்தும், தொற்று குறித்து விழிப்புணர் ஏற்படுத்தியும் வருகிறார்கள்.
மேலும் வார்டு வாரியாக கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் முழுமையாக மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே தொற்றைத் தடுக்க முடியும். தேவையற்ற காரணங்களை கூறிக் கொண்டு சாலையில் பயணம் செய்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்புக்கு முதலமைச்சர் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ”யார் பொறுப்பு ஏற்பது என்பதை விவாதம் செய்வதற்கான நேரம் இது இல்லை, மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டிய நேரம் இது” எனவும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் சசிகலா விடுதலையாவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்காத அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.
இதையும் படிங்க :சசிகலா விடுதலை எப்போது? - சிறை நிர்வாகம் விளக்கம்