சென்னை: தமிழ்நாட்டில் பேருந்து கட்டண உயர்வு குறித்த செய்திகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ’அரசுப் பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலாவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகிவிட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்டபோது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்துவிட்டேன்.
இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநிலப் பேருந்துகளும் கட்டணத்தை உயர்த்தவேண்டும் என்பது ஒப்பந்த விதி. அப்படி தான் பர்மிட் வழங்கப்படும்.
கேரள மற்றும் ஆந்திர மாநிலங்களில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட சூழலில், அந்த மாநிலங்களுக்குள் செல்லும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் அந்த மாநிலத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அட்டவணையை குழப்பிக் கொண்டு, ''தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்துப் பேருந்துகளுக்கும் கட்டணம் உயர்த்த அட்டவணை தயாராகி விட்டது" என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது.