தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பருவகால மாறுபாட்டினால், சிதிலமடைந்த கட்டடங்களை இடித்து, அதே இடங்களில் மறுகட்டுமானம் செய்து, முன்னர் அக்குடியிருப்பில் குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. மறுகட்டுமானம் என அழைக்கப்படும் இத்திட்டத்தின்கீழ் ஏகாம்பரம்பிள்ளை, முனுசாமிபிள்ளை திட்டப்பகுதிகளில் 31.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 208 வீடுகள் கட்டப்படவுள்ளன.
இப்பணிகளை ஆய்வுசெய்த ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை உடனடியாகத் தொடங்க உத்தரவிட்டார்.
பட்டினப்பாக்கம்
இப்பகுதி அருகாமையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புதாரர்களையும் கணக்கெடுப்பு செய்து அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்புகள் கட்ட உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க அறிவுறுத்தினார்.
பட்டினப்பாக்கம் திட்டப்பகுதியில் 152 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுவரும் 1,188 குடியிருப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பார்வையிட்டு, மேம்பட்ட தரத்தினை உறுதி செய்யவும், கரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட சிரமமான சூழ்நிலையிலும் கட்டுமானப் பணிகளை காலதாமதம் இல்லாமல், நிர்ணயித்த காலவரம்பிற்குள் பணிகளை முடித்து பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்கவேண்டும் எனவும் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.