வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் வணிகவரி இணை ஆணையர்களின் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிகவரி வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:
“எல்லா துறைகளிலும் மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்பதில் முன்மாதிரியாக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார். மழை காரணமாக வெள்ள சேதத்தை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசி, குறைந்த நாள்களில் அவற்றை சீர் செய்துள்ளார். வணிகவரித்துறை மூலமாக பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை இன்று ஆய்வு செய்தேன். ஆய்வில் அரசுக்கு வரக்கூடிய வருவாயை உயர்த்துவதற்காக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் பற்றி பேசினோம்.
'வரி ஏய்ப்பு செய்பவர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள்’
சிலர் அரசுக்கு செலுத்த வேண்டிய வருவாயை செலுத்தாமல் உள்ளனர். இன்னும் நான்கு மாத காலத்தில் வரி வருவாயை உயர்த்த வேண்டும் என கூறியுள்ளேன். ஆய்வுப்பணிக்காக புதிதாக 100 வாகனங்கள் வாங்கப்படும். கடந்த காலத்தைவிட இந்த ஆண்டு வரி வருவாய் உயரும். தொடர்ந்து வரி ஏய்ப்பு பற்றி ஆய்வு நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கான சோதனைகள் இதுவரை செய்யப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
பதிவுத்துறையில் கடந்த காலத்தை விட தற்போது வெளிப்படைத்தன்மை அதிகரித்துள்ளது. ஏமாற்றுபவர்கள் எவ்வளவு பெரிய ஆள்களாக இருந்தாலும் எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பதிவுத்துறையில் பெயரோடு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். கூடிய விரைவில் அது நடைமுறைக்கு வரும்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்கள், நீர் வழித்தடங்களில் உள்ள இடங்கள் ஆகியவற்றை பத்திரப் பதிவு செய்தவர்கள் மீது நீதிமன்றத்துக்கு செல்லாமல் துறை அலுவலர்களே நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது”என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் கீழ் தமிழ்நாட்டில் நடப்பாண்டின் அக்டோபர் மாதம் முடிய மொத்தம் (இழப்பீட்டுத் தொகையுடன்) 56,295 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இது முந்தைய ஆண்டு அக்டோபர் 2020 வரை ஒப்பிடுகையில் 26 விழுக்காடும், அக்டோபர் 2019 முடிய ஒப்பிடுகையில் மூன்று விழுக்காடும் கூடுதல் வளர்ச்சி விகிதமாகும்.
வரி ஏய்ப்பைக் களைய புகார் பிரிவு