சென்னை:தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 5 தடகள வீரர்களுக்குத் தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அதற்கான காசோலை வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு வீரர்களின் பெற்றோர்களிடம் காசோலை வழங்கினர்.
அப்போது அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு,
"இந்த நேரு விளையாட்டு அரங்கம் திறந்தது முதல், இங்கு உலக அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது வரை எனக்கு நினைவிருக்கிறது. திமுக ஆட்சி, பொறுப்பேற்று இந்த விளையாட்டு அரங்கில் நடைபெறும் 3ஆவது நிகழ்ச்சி இதுவாகும்.
முதலமைச்சராக ஸ்டாலின் இங்கு இரண்டு முறை வந்திருக்கிறார். ஊக்கத்தொகை மற்றும் பெரும் வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு அரசு செய்துதரும்" என்றார்.
அதைத்தொடர்ந்து பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன்,
"தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, ரூ.5 லட்சம் காசோலை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இவ்வளவு பேர் பங்கேற்பது முதல் முறையாகும். இந்திய அளவில் 120 பேர் பங்கேற்க உள்ளனர்.
முதலமைச்சர் தொலைநோக்குப் பார்வையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளார். அதில் ஒலிம்பிக் போட்டிக்காகத் தமிழ்நாட்டை நான்கு மண்டலங்களாகப் பிரித்து மண்டலங்களுக்கு, திறமை வாய்ந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தரத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையை விளையாட்டு நகரமாக உருவாக்க உள்ளோம்.
தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர்களுக்கும் தனியாக வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டு வருகிறது. அனைவரும் தங்கம் வெல்வதே தமிழ்நாட்டின் கனவாகும். அவர்கள், நிச்சயம் தங்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள்" என்றார்.
இதையும் படிங்க:தங்கம் வென்று வா- மதுரை ரேவதிக்கு தமிழிசை வாழ்த்து