சென்னை : வருங்காலத்திற்கான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட ஆலோசனை குழுக் கூட்டம், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.22) நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் நீரஜ் மிட்டல் மற்றும் உயர் அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்த நிபுணர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “கடந்த 6 மாதங்களில் தகவல் தொழில்நுட்பத்துறை பல்வேறு வளர்ச்சியை அடைந்துள்ளது. முதலமைச்சரின் ஆலோசனையின் படி, வருங்கால தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைப்பெற்றது.
வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை மாநிலத்தில் மேம்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து பொருளாதாரத்தை மேம்படுத்தவே இந்த முயற்சி. நாட்டிலேயே முன்னணி துறையாக இந்த துறையை மாற்ற இந்தக் குழு அச்சாணியாக அமையும். TNEGA மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, ELCOT மூலம் முதலீடுகளை ஈர்த்து வருவதாகவும், முறையாக வேலை வாய்ப்பு கிடைப்பதை உறுதிப்படுத்துவதே நோக்கம்” என்றார்.