சென்னை: இ பாஸ் தளம் முடக்கம் குறித்து தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மக்கள் ஒரே நேரத்தில், இ-பதிவினை மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். இது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்ட தளமாகும். அவசிய தேவை இருப்பின் மட்டுமே, இ-பாஸ் பதிவு தளத்தை பொதுமக்கள் அணுகவேண்டும். தேவையில்லாமல் இதனை பயன்படுத்தி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மொத்தம் ஆறு லட்சம் பதிவுகளை ஏற்றுக்கொள்ளக் கூடியத் தளத்தில், 60 லட்சம் பேர் பதிவுசெய்ய முற்பட்டதால் தான் இணையதளம் முடங்கியது. ஓடிடி தளத்தில் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் உள்ள தொடரை தடை செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் ஊழல் புகார் காரணமாக ரத்து செய்யப்பட்ட கிராமங்களுக்கு இணையதளம் கொண்டு செல்லும் திட்டமான 'பாரத் திட்டம்' குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் வாதாடி வெளிப்படையாக ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கூறினார்.