சென்னை: சைதாப்பேட்டை, மாந்தோப்பு, ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் 20 லட்சம் ரூபாய் செலவில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டது.
இதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேற்று (அக்.16) திறந்துவைத்தார். இந்நிகழ்வில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பகுதி செயலாளர்கள் எம். கிருஷ்ணமூர்த்தி, இரா. துரைராஜ் சைதை, மா. அன்பரசன், வழக்கறிஞர் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாக்கடை தேங்கி நிற்கும் அவல நிலை
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் முன்னிலையில் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் புதிதாகவும், ஏற்கனவே இருந்த உணவருந்தும் கூடம் மேம்படுத்தப்பட்டும் திறக்கப்பட்டுள்ளன.
அருகிலுள்ள தாழ்வான திவான் பாஷ்யம் பகுதியில் 300 குடியிருப்புகள் உள்ளன. எப்போது மழை வந்தாலும் மழைநீரும், சாக்கடையும் கலந்து தேங்கிநிற்கும் நிலை இங்கு தொடர்ந்து நீடிக்கிறது. இதை சரி செய்ய மாநகராட்சி தலைமை பொறியாளர், கழிவுநீர் மற்றும் குடிநீர் வாரிய அலுவலர்களுடன் சென்று ஆய்வு செய்யவுள்ளேன்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தால் இந்நேரம் கொண்டாடியிருப்போம். நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிகேஎஸ் இளங்கோவன், திரூச்சி சிவா ஆகியோர் நீட் தேர்வின் பாதிப்பு குறித்த நீதியரசர் ஏகே. ராஜன் கமிட்டியின் அறிக்கையை ஏழு மொழிகளில் பெயர்த்து, 12 மாநில முதலமைச்சர்களை நேரில் சந்திக்கும்போது கொடுத்து வருகிறார்கள்.
ஒன்றிய அரசின் நிதி தேவைபடுகிறது
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூட அவருடைய ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக கூறினார். இந்தியாவின் எல்லா மாநில முதலமைச்சர்ளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும் நீட்டிலிருந்து விலக்கு பெற வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியுள்ளது.
கரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு எந்த மாநிலத்திலும் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை. எந்த மாநிலமும் அப்படி வழங்கவும் முடியாது. உச்ச நீதிமன்றம் 50ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இன்னும் எந்த மாநிலமும் நிதி கொடுக்கத் தொடங்கவில்லை. ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் வந்தவுடன் முதலமைச்சர் இது குறித்து முடிவெடுப்பார். ஒன்றிய அரசின் நிதியும் தேவைப்படுகிறது.
முதலமைச்சரை தினமும் சந்திக்கலாம்
கரோனா தாக்கம் தமிழ்நாட்டில் குறைந்து கொண்டே வருகிறது. எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள். பள்ளிகளில் கரோனா தடுப்பு நெறிமுறைகளையும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட வழிகாட்டுதல்களையும் சரியாக பின்பற்ற வேண்டும்.
2015ஆம் ஆண்டு முன்னறிவிப்பின்றி ஒரே இரவில் 1 லட்சம் கனஅடி நீரை செம்பரபாக்கத்தில் திறந்ததால்தான் சைதாப்பேட்டை பாதிக்கப்பட்டது. அப்போதைய முதலமைச்சரை அலுவலர்கள் சந்திக்க முடியததால் ஏற்பட்ட அசம்பாவிதம். நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம் அது.
சாதாரண நபர் தொடங்கி அலுவலர்கள் வரை தற்போதைய முதலமைச்சரை தினமும் சந்தித்து வருகிறார்கள். எனவே மீண்டும் அது போன்ற நிலை சென்னைக்கு ஏற்படாது. எளிய மக்கள் முதல் அதிகாரிகள் வரை எளிதாக சந்திக்கும் முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க:கயத்தாற்றில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் - வைகோ