சென்னை:பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் அதிகமாகப்பரவி வருவதால் சுகாதாரத்துறை அலுவலர்கள் கரோனா தடுப்பூசி வியாழக்கிழமைதோறும் போட செல்லும்போது, காய்ச்சல் குறித்தும் ஆய்வு செய்வார்கள் எனவும், தலைவர்கள் பொதுமக்களை பீதி அடையச்செய்யும் வகையில் பேட்டியோ, அறிக்கையோ அளிக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
பொது சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாட்டில் 37ஆவது கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை தியாகராயநகரில் உள்ள கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொடர்ந்து தடுப்பூசி சிறப்பு முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 5.38 கோடி பேருக்கு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 96.50 விழுக்காடு பேர் முதல் தவணையும், 91.10 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
அதேபோல், முன்னெச்சரிக்கை தடுப்பூசி 4.25 கோடி பேருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், 80,705 பேர் மட்டுமே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியைச் செலுத்தியுள்ளனர். பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்வது அவசியமானது. தற்பொழுது கரோனா தொற்று 50ஆயிரம் முதல் 1லட்சம் வரையில் சில நாடுகளில் உறுதியாகிறது.
கேரளாவில் 2500-க்கும் மேற்பட்டோருக்கு நேற்று மட்டும் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று 450-க்கும் கீழ் தொடர்ந்து குறைந்துகொண்டு செல்லும் என எதிர்பார்த்த நிலையில், சென்னை, கோயம்புத்தூரில் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே 30ஆம் தேதிக்குள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும்.
அதனைப்பயன்படுத்தி மக்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் தயக்கம் காட்டாமல் விரைந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். சென்னையில் 99.12 விழுக்காடு பேர் முதல் தவணையும், 87.17 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் சென்னையில் செலுத்தியுள்ளனர். மாநில அளவைவிட 4 விழுக்காடு குறைவாக உள்ளது. அதனை அதிகரித்து பாேடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசு அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி இலவசம் தொடருமா அல்லது தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்த ஊசி போட்டுக் கொள்ள வேண்டுமா? என்பதை அறிவிக்கும். இது குறித்த தகவல் இன்னும் சில நாட்களில் தெரியவரும்.