சென்னை:எழும்பூரிலுள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(ஜூன்.10) ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது," தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருந்து கையிருப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
தற்போது பேரிடருக்குத் தேவையான அளவிற்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அளிக்க கையிருப்பில் உள்ளது.
ரெம்டெசிவிர் மருந்துக்குத் தொடக்கத்தில் தட்டுப்பாடு இருந்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் காரணமாக, தற்போது மருந்து வழங்குவதில் இருந்த பிரச்னை சரி செய்யப்பட்டுள்ளன.
தற்போது ரெம்டெசிவிர் மருந்து 9 லட்சத்து 50 ஆயிரம் வாங்கப்பட்டு, 5 லட்சத்து 75 ஆயிரம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தனியார் மருத்துவமனைகளுக்கு, 1 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2 லட்சத்து 91 ஆயிரம் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
அதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 115 சிடி ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளன.
அரசு மருத்துவமனைகளில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஒரு லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் நடைபெறும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை! இது வரலாற்றிலேயே அதிகமானதாகும். மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகள், முகக்கவசமும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன.
தனியார், அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் உடனுக்குடன் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான வழிகாட்டுதல் குறித்து தெரிவிப்பதற்காக அமைக்கப்பட்ட உயர் நீதிமன்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு, இன்று(ஜூன்.10) ஆலோசனையில் ஈடுபடுகிறது.
நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களை குழப்ப வேண்டாம் எனக் கூறும், மாநில பாஜக தலைவர் எல்.முருகன், தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று மத்திய அரசிடம் பேசி அறிவித்தால், உடனடியாக வரவேற்கத் தயாராக இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில், எதன் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி, அரசு அறிவிக்கும். கடந்த ஆட்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு உணவு, தங்கும் இடத்துக்குச் செலவு செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
முறைகேட்டில் ஈடுபட்டது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று குறைந்த பின்னர், இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கனவுத்திட்டம் : சிங்கார சென்னை 2.0!