சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கலைக்கல்லூரி வளாகத்தில் 120 படுக்கைகள் கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 31) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "தமிழ்நாட்டில் 11 இடங்களில் யோகா மற்றும் இயற்கை கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டுவருகிறது. கடந்த மூன்று வார காலத்தில் 50 இடங்களில் சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த மையம் 62ஆவது மையமாக திறக்கப்பட்டுள்ளது. சித்தா, இயற்கை மருத்துவ வழியில் கரோனா சிகிச்சைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.
'இனி பரிசோதனை முடிவுகள் விரைவில் வரும்'
தமிழ்நாடு விரைவில் கரோனா தொற்றில்லாத மாநிலமாக உருவெடுக்கும். தமிழ்நாட்டில் 269 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் உள்ளது. தொடக்கக் காலத்தில் பணிச்சுமை காரணமாக பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதமானது. கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதற்கு பின், தற்போது பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளிவருகிறது. எங்கேனும் பரிசோதனை முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் புகார் தெரிவிக்கும்பட்சத்தில் அது சரி செய்யப்படும்.