சென்னை:பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழா மற்றும் சர்வதேச பொதுசுகாதார மாநாட்டிற்கான அடையாள இலச்சினையை வெளியிட்டும், பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகளை இணையத்தில் பதிவேற்றம் செய்தல் இணையதளத்தினையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் பொதுமக்கள் எவ்வித இன்னல்களுமின்றி பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்திட 1969ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பிறப்பு, இறப்பு பதிவேடுகளை சி.எஸ்.ஆர். இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் வருவாய்த்துறை, நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறைச் சார்ந்த பிறப்பு இறப்பு பதிவாளர்களால் 16,348 பதிவு மையங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 1-1-2018-க்குப் பிறகு இறப்பு தொடர்புடைய துறைகளால் பிறப்பு, இறப்பு பதிவுப் பணி வெவ்வேறு மென்பொருள்களில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதனால் பிறப்பு, இறப்பு பதிவுத்திட்டத்தைக் கண்காணிப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஒரே சீரான மென்பொருள் பொதுசுகாதாரத்துறையில் உருவாக்கப்பட்டு, அரசு ஆணையின்படி அனைத்து தொடர்புடைய துறைகளின் பிறப்பு இறப்பு பதிவாளர்களால் 2018 ஜனவரி முதல் அனைத்து பதிவு மையங்களிலும் இணையதளம் மூலம் பிறப்பு இறப்பு பதிவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.