மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ''இந்திய அரசின் 2020 புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அனைத்து மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையின் முடிவில், ஏழு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறைச் செயலாளர் தலைமையில் புதிய கல்விக் கொள்கை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
புதிய கல்விக் கொள்கை 2020 குறித்த எனது கருத்துகளை முன்வைக்கிறேன்.
(1) புதிய கல்விக் கொள்கை 2020, 2035க்குள் 50% மொத்த சேர்க்கை விகிதம் (ஜி.இ.ஆர்) இலக்கை அடையத் திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் ஜி.இ.ஆர் 49%ஆக உள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறோம். 2019-20ஆம் கல்வியாண்டில் 50% இலக்கை எட்டுவோம் என்று நாங்கள் நம்புகிறோம். புதிய கல்லூரிகளைத் திறப்பது, புதியப் படிப்புகளை அறிமுகப்படுத்துவது, ஆசிரியர்களைச் சேர்ப்பது ஆகியவற்றின் மூலம் கல்லூரிகளின் திறனை அதிகரிக்கிறோம். மேலும் ஆய்வகங்கள் மற்றும் பிற வசதிகளை உருவாக்குவதன் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தொடர்ந்து இதைச் செய்வோம். மேலும் 2035ஆம் ஆண்டளவில் தமிழ்நாடு 65% என்ற லட்சிய இலக்கை அடைய முடியும்.
(2) அகில இந்திய அளவில் ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:26 என்றும், தமிழ்நாட்டில் ஆசிரியர்-மாணவர் விகிதம் 1:17ஆகவும் உள்ளது.
(3) பி.எட் திட்டத்தை 4 ஆண்டு ஒருங்கிணைந்த விருப்ப பாடநெறியாக மாற்ற NEP 2020 திட்டமிட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஏனெனில், மாணவர்கள் ஆரம்பத்தில் பட்டப்படிப்பை முடித்து, கற்பித்தல் தொழிலில் விரைவாக நுழைய முடியும். முக்கிய படிப்புகளைத் தேர்ந்தெடுத்த நிறைய மாணவர்களுக்கு இது உதவும்.
(4) தேசிய சோதனை நிறுவனம் (என்.டி.ஏ) நுழைவுத் தேர்வை நடத்த NEP 2020 (National Education Policy 2020) முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும். இது மாணவர்கள் மீது கூடுதல் சுமையாக இருக்கும்.