சென்னை: பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான நிர்வாக பயிற்சி முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் பேசிய அமைச்சர் கே.என்.நேரு , "1986-க்கு பிறகே பேரூராட்சிகள், ஒன்றியத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டது. தற்போது உள்ள பேரூராட்சி தலைவர், உள்ளிட்டோர் தங்களது பதவிக் காலத்தில், அனைத்து திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் கலைஞர் மேம்பாட்டு திட்டம் மூலம் 450 கோடியில் பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்றுள்ளது. பேரூராட்சி தலைவர்கள், பேரூராட்சியின் அனைத்து பகுதிக்கும் சமச்சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோகம் தொடர்பாக அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்க முன்வர வேண்டும். குடிநீர் திட்டங்களுக்கான நிதி அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கப்படும்.