சென்னையில் அதி தீவிரமாக பரவி வரும் கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் இன்று (ஜூன் 17) காலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், “கரோனா வைரஸ் தடுப்பு பணியில், 200 வார்டுகளில் அந்த வார்டை பற்றி நன்கு தெரிந்த ஒரு உதவிப் பொறியாளரை நியமித்து, அவர் தலைமையில் அனைத்து அலுவலர்களும் பணிபுரிவர். வைரஸை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்கள் முகக் கவசம் அணிவது, தகுந்த இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்றினால் வைரஸை முழுமையாக அழித்து விடலாம்“ என்றார்.