40ஆவது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி கூட்டம், காணொலி காட்சி மூலம் இன்று நடைபெற்றது. இதில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர், “2017-18ஆம் ஆண்டிற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி தொகையான, 4,073 கோடி ரூபாயை விரைந்து வழங்க வேண்டும். 2018-19ஆம் ஆண்டு நிலுவையான 553.01 கோடி ரூபாய் மற்றும் 2019-20ஆம் ஆண்டிற்கான 1,101.61 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவையை மத்திய அரசு விரைந்து வழங்கிட வேண்டும்“ என வலியுறுத்தினார்.
இன்றைய கூட்டத்தில் ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் வணிகர்களுக்கு பயனளிக்கக்கூடிய சட்டக்குழுவின் பல்வேறு பரிந்துரைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் ஜவுளி, காலணி, செல்பேசி, உரங்கள் போன்ற பொருள்கள் தலைகீழான வரி கட்டமைப்பை கொண்டுள்ளதால், தொழில் புரிவோருக்கு இடர்பாடுகள் ஏற்படுவதுடன், வரி திருப்புத் தொகையும் வழங்கப்பட வேண்டியுள்ளது. இதனை சீர் செய்யவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.