தலைமைச் செயலகத்தில் இன்று 2017-2018ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவை வரிகள் நிலுவைத் தொகையினை வழங்குவது தொடர்பாக, அமைச்சர்கள் அடங்கிய குழு கூட்டமானது காணொலி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசும் போது, “கடந்த 22.09.2020 அன்று நடைபெற்ற அமைச்சர்கள் குழு கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ஜிஎஸ்டி வரியான ரூ.4,321 கோடி தருவது என ஒப்புக்கொள்ளப்பட்டது.
பரிந்துரைகள் செய்வதற்கு முன்னர், மாநில அரசுகள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தொகையினை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், நிலுவைத் தொகை குறித்த கணக்கீடுகள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய தொகையை, மத்திய அரசு முழுமையாக வழங்கிட வேண்டும்.