அரசு சார்பில் மீன் வளத்தை பெருக்கும் வகையில், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 2 நாடிகல் மைல் தொலைவில் செயற்கை பவளப்பாறைகள் போடப்பட்டுள்ளன. 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 200 பவளப்பாறைகள் அமைக்கும் இத்திட்டத்தால், 35 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் பயனடைவர் என்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்தியாவிலேயே குஜராத்தை பின்னுக்குத் தள்ளி மீன் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிமுகவின் கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், எஸ்.வி.சேகர் உண்மையிலேயே மான ரோஷம் உள்ளவராக இருந்தால், அதிமுக கொடியை காண்பித்து சட்டப்பேரவை உறுப்பினராகி 5 ஆண்டுகள் பெற்ற ஊதியத்தை திருப்பி அளிப்பதோடு, பென்சனையும் வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டு பேசட்டும் என்று காட்டமாக தெரிவித்தார்.