சென்னை: கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவ பயனாளர்களுக்காக அம்மா மினி கிளினிக் என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தால் மக்களுக்கு பயன் ஏதுமில்லை என்றும், பல இடங்களில் அம்மா மினிக் கிளினிக் திட்டத்தின் பெயர் பலகை மட்டுமே உள்ளதாக கூறி ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு அம்மா மினி கிளினிக்கினை அப்புறப்படுத்தியது.
இதற்கு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில் அம்மா மினி கிளினிக் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும், சில இடங்களில் சுடுகாட்டை மறித்து ஒரு சிறிய அறையில் அம்மா மினி கிளினிக் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்து புரிந்து செயல்பட வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற எதிர் கட்சியின் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி திமுக அரசைகொச்சைப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில் இருந்தே தெரிகிறது எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக மக்கள் மீது அக்கறை ஏதும் இல்லையென்று.
எடப்பாடி அவர்கள் தற்போதுள்ள அரசால் தமிழகத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதென்றும், எந்தெந்த திட்டங்களின் செயல்பாடுகள் எந்தெந்த வகையில் மக்களுக்கு பயன்படுகிறதென்றும் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பகையையும் பொல்லாததையும் அறிக்கையாக தயாரித்து நானும் அரசியலில் இருக்கிறேன் பார், என்று சொல்லி ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு மீண்டும் படுக்கைக்கு போய் விடுகிறார். நேற்று அவர் விடுத்த அறிக்கையில் மக்களை தேடி மருத்துவத்திட்டம் செயல்படவே இல்லை என்றும், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஒரு கோடி இலக்கு என்று சொன்னார்கள் ஆனால் இதுவரை 40 லட்சம் பேர் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார்.
அவருக்கு எழுதிக்கொடுத்தவராவது முறையாக அறிந்து தெரிந்து அறிக்கையை வெளியிட வேண்டும் என்கின்ற ஒரு குறைந்தபட்ச அந்த நிலையை கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு முறையாக தெரிந்துவிட்டு இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தால் அறிக்கையில் உண்மை இருந்திருக்கும்.
சைதாப்பேட்டையில் ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டு தொடக்கம் என்கின்ற வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் புதிய பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களைத் தந்து அந்த திட்டத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என்றும் அதன் பயன்பாடு குறித்தும் தெளிவாக விளக்கியுள்ளேன்.