தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அதிகம் மழைபெய்தால் மதகுகளை திறந்துதான் ஆக வேண்டும் - செம்பரம்பாக்கத்தில் துரைமுருகன் - செம்பரம்பாக்கம் ஏரி

மழை அதிகமாகப் பெய்தால் ஏரியின் அனைத்து மதகுகளையும் திறந்துதான் ஆக வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வுக்குப்பின்னர் தெரிவித்தார்.

செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்யும் அமைச்சர் துரைமுருகன்
செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்யும் அமைச்சர் துரைமுருகன்

By

Published : Nov 9, 2021, 8:00 AM IST

Updated : Nov 9, 2021, 9:11 AM IST

சென்னை: தொடர் கன மழையால், முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து, நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மேலும், மழை நீடித்ததால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் ஆதாரமாக விளங்கும் பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், நேமம் ஏரிகள் நிரம்பும் நிலையை எட்டி உள்ளது.

நேற்று (நவ. 8) மாலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 21.33 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2942 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. நீர் வரத்து வினாடிக்கு 400 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்யும் அமைச்சர் துரைமுருகன்

2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

அதனால் தொடர்ந்து மழை பெய்து ஸ்ரீபெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், நேமம் ஏரிகள் நிரம்பி நீர் வரத்து அதிகரித்தால் வெளியேற்றும் உபரி நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி நடந்தால் அடையாறு ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உண்டானால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

செம்பரம்பாக்கத்தில் துரைமுருகன்

எனவே, வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உபரி நீரைச் சீராக வெளியேற்றத் திட்டமிட்டு, இரண்டு ஷட்டர்கள் மூலம் 2 ஆயிரம் கன அடி நீரைத் தொடர்ந்து வெளியேற்றி வருகின்றனர். மேலும் செம்பரம்பாக்கம் ஏரியை 20 அல்லது 21 அடியில் சீராக வைத்துக் கண்காணிக்க பொதுப்பணித்துறை அலுவலர்கள் முடிவு செய்துள்ளனர்.

மக்கள் உயிரே முக்கியம்

இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (நவ. 8) ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "சேதாரம் இல்லாமல் இருந்தால் போதும், வரும் நாட்களில் மழை வருவது உண்மையாக இருக்குமானால் தக்க நடவடிக்கை எடுப்போம். சில நேரங்களில் வானிலை ஆய்வாளர்கள் செல்வார்கள். ஆனால் மழை வேறு பக்கம் சென்று விட்டது என்பார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரியை ஆய்வுசெய்யும் அமைச்சர் துரைமுருகன்

அதிகபட்சமாக மழை இருக்குமானால் அனைத்து மதகுகளையும் திறந்துதான் ஆக வேண்டும். நீர் நிலைகளைக் காப்பாற்ற வேண்டும், சேதாரமானால் பெரும் விளைவை ஏற்படுத்தும், இவ்வளவு தண்ணீர் வீணாகப் போகிறது என எனக்கு அங்கலாய்ப்பு இருந்தாலும் மக்கள் உயிர் அதைவிட பெரியது.

ஆற்றங்கரையோரம் வீடு கட்டி இருப்பவர்கள் அலுவலர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும். பொதுவாக நீர் நிலைகளில் ஆக்கிரமிப்பு இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆனால் நம்மூரில் அது நடக்கவில்லை. நாங்கள் அகற்றுகிறோம் மீண்டும் வந்து விடுகிறார்கள்.

படிப்படியாகத் திறக்கிறோம்

அதிமுக அமைச்சர்கள் செயல்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் போல் நாங்கள் உபரி நீரை மொத்தமாகத் திறக்காமல் படிப்படியாகத் திறந்து விடுகிறோம். நீர் வெளியேற்றுவதை ஜாக்கிரதையாகவும், உள்ளே வருவதைக் கவனித்துக் கொண்டு இருக்கிறோம்" எனத் தெரிவித்தார். ஆய்வின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: இரண்டாம் நாள் மக்களுடன் ஸ்டாலின்

Last Updated : Nov 9, 2021, 9:11 AM IST

ABOUT THE AUTHOR

...view details