சென்னை:சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல்.26) நேரம் இல்லாத நேரத்தில் பேசிய மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, ஆதார் எண் இணைக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், கைரேகை சரியாக பதிவாகவில்லையென பல இடங்களில் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்றும், அதற்கு மாற்று வழியை அரசு பரிசீலித்து வருகிறதா என்பதை அறிய விரும்புவதாகவும் கூறினார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ”ஆதார் எண் இணைக்கப்பட்டு விரல்ரேகை சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன்படி ரேஷன் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் வந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.
பிரதிநிதிகளை நியமிப்பது எப்படி?:பிரதிநிதிகளை நியமிப்பதற்கான படிவங்கள் ரேஷன் கடைகளிலும், உணவுத்துறையின் www.tnpds.gov.in என்ற உணவுத் துறையின் இணையதளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. அதை நிரப்பி விண்ணப்பித்து, பிரதிநிதிகளை பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் 2,39,803 அங்கீகரிக்கப்பட்ட அட்டைகள் உள்ளன. அவற்றில் 22.4.2022 வரை 1,79,47,639 பரிவர்த்தனை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.