மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட 13 வட்டங்களில் ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் குறைத்தீர் முகாம் நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், முதியோர் ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர்.
இதனையடுத்து பெறப்பட்ட மனுக்களில் 233 பேரின் மனுக்கள் தீர்வுகாணப்பட்டு, அதற்கான நலத் திட்டங்கள் வழங்கும் விழா மதுரவாயலில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் கலந்துகொண்டு, 233 பேருக்கும் நலத் திட்டங்களை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு குறைத்தீர் திட்டத்தின் மூலம் மாநிலத்தில் கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் 5 வருடத்தில், 5 லட்சம் மகளிர் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க அதிமுக தயார். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அமோக வெற்றி பெறும் என்றார். மேலும் அதிமுகவில் கூட்டணிக் கட்சித் தலைவர் இடையே கருத்து வேறுபாடு உள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் ஒன்றாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார்.