சென்னை:அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புனரமைக்கும் பணிகளை இன்று (செப்.2) பார்வையிட்ட பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியளார்களிடம் பேசுகையில், 'ஆசியாவின் 2ஆவது மிகப்பெரிய நூலகமான, சென்னையில் உள்ள கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் மறைந்த கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் இந்த நூலகத்தை பார்வையிட்டபோது “இதுபோன்று பரந்து விரிந்த மிக அதிகமான புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை, வேறு எங்கும் கண்டதில்லை” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
புதியதாக ஆட்சி பொறுப்பேற்ற, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிதிலமடைந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தைச் சீர்செய்ய வேண்டும் என்ற நோக்கில், ரூ.32.49 கோடி ஒதுக்கீடு செய்து 25.10.2021அன்று அரசாணை வெளியிடப்பட்டார். அதில் சிவில் பணிக்காக ரூ.18.26 கோடியும், மின் பணிக்காக ரூ.14.23 கோடியும் ஒதுக்கப்பட்ட நிலையில் இப்பணிகள் 30.9.2022அன்று முடிவடைய வேண்டுமென்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்நூலகம் 8 தளங்களைக்கொண்டதால் ஒவ்வொரு தளங்களாகப்பார்த்து, எங்கெல்லாம் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது; எங்கெல்லாம் பணிகள் விரைவுப்படுத்தப்பட வேண்டும் என்று விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. தற்போது புதியதாக 30,160 சதுர அடி அளவிற்கு தரை விரிப்பு அமைக்கப்பட்டுள்ளது.