சென்னை:பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல், தனியார் பள்ளி மாணவர்களுக்கான கட்டணம் நிர்ணயம் செய்தல் ஆகியவை தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (மே.10) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், உயர் கல்வித்துறை (கூடுதல்) செயலர் அபூர்வா, அரசு தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது தொடர்பாக அனைத்து பள்ளிக்கல்வித் துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. மாணவர்களின் எதிர்காலம் முக்கியம் என்றாலும்கூட மாணவர்கள் உடல் நலம் அதைவிட முக்கியமானது என்பதால், நன்றாக ஆலோசித்து மட்டுமே எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்திய பின்பு அவரின் அறிவுறுத்தலின்படி முடிவுகள் எடுக்கப்படும்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாளையும் (மே.11), நாளை மறுநாளும் (மே.12) மேலும் சில குழுக்களுடன் ஆலோசனை நடத்திய பின்பே முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும்.