சென்னை: அரசினர் மதரஸா-இ-அசாம் மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டுவதற்கான கல்வெட்டைத் திறந்துவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு மாண்டிசோரி முறையில் பாடம் கற்பிக்கும் நிகழ்வைப் பார்வையிட்ட அன்பில் மகேஷ் செய்தியாளரிடம் கூறியதாவது, ”சென்னையில் புதிதாக பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால் இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள் பள்ளி கட்டடங்களைக் கட்டுவதற்கான நீதி வழங்குவதற்காகப் புதிய இணையதளம் விரைவில் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 467 வகுப்பறைகளில் குழந்தைகளுக்குப் பாலியல் புகார்கள் குறித்த புகார் தெரிவிக்க இலவச அழைப்பு சைல்டுலைன் எண் (childline) 1098, பள்ளிக் கல்வித் துறையின் உதவி எண் 14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமில்லாமல் மாணவர்களும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு (Sexual Harassment) ஆளாகின்றனர். பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் முதலில் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..