சென்னைகாமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் தலைமை அலுவலகத்தில், இன்று (ஆக.15) 76ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து சாரண சாரணிய மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற பள்ளி மாணவ-மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
முதலமைச்சருக்கு நன்றி:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, '76ஆவது சுதந்திர தினத்தில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டதற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்தப்படுவதில்லை என்பதாலேயே கொண்டு வரப்பட்டது. எனவே, அம்மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடர்ந்து நடத்தப்படுவதில் எந்தவித குழப்பமும் இல்லை; தற்போது உள்ள அதே நடைமுறையே தொடரும். மாணவர்கள் எந்தவித குழப்பமும் அடைந்து தன்னம்பிக்கை இழந்துவிடக்கூடாது.
பெற்றோர்களிடம் கருத்துக்கேட்பு:கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவதற்காக மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே, 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.