சென்னை: நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் மிகவும் பழமையான கட்டிடங்களின் தற்போதைய தர நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் குழுவிடம் அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, 96 திட்டப்பகுதிகளில் உள்ள 30 ஆயிரத்து 517 பழைய குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய தொழில்நுட்பக்குழு பரிந்துரை செய்தது.
மேலும், சென்னையில் மட்டும் 27 ஆயிரத்து 500 குடியிருப்புகள் வாழத்தகுதியற்வை என கண்டறியப்பட்டு, அதில் முதற்கட்டமாக 15 ஆயிரம் குடியிருப்புகளை கட்டிக்கொடுக்க நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்பட்டது. சென்னையில், குயில்தோட்டம், திருவொற்றியூர், சுபேதார் கார்டன் பகுதிகளில் மறுகட்டுமானம் செய்யப்படும் குடியிருப்புகளில் வசிக்கும் குடியிப்புவாசிகளுக்கு இதுவரை 3 கோடியே 14 லட்சம் ரூபாய் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை கொய்யத்தோப்பு மற்றும் காக்ஸ் காலனிகளில் உள்ள பழைய அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்துவிட்டு புதிதாக 400 சதுரடியில் 386 குடியிருப்பு வீடுகள் கட்டப்படவுள்ளன. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், 386 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக 92 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி தயாநிதிமாறன் ஆகியோர் பொதுமக்களிடம் நேரடியாக வழங்கினர்.