சிமெண்ட் தயாரிப்பதற்கு தேவையான கனிமங்களை பெரம்பலூர் மாவட்டம் தேரணி கிராமத்திலிருந்து வெட்டி எடுத்து கொண்டு செல்வதற்கான வாகன அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி திருச்சி டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனம் 2016ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அந்த பகுதியில் இருந்து கனிமங்களை எடுத்துசெல்வதற்கான அனுமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் டால்மியா நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் அரசு தரப்பில், கனிம வளங்களை எடுத்துச்செல்வதற்கும் சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், குத்தகையே வழங்கபடாத நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்றும் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உரிய விதிகளை கடைபிடிக்காமல் கனிம வளங்கள் அனுமதி அளவைவிட கூடுதலாக எடுக்கப்படுவதாகவும், இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் இடைக்கால உத்தரவுடன் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
கனிம வளங்களை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் அரசுக்கு வருவாய் வருவதால், நீதிமன்றங்களில் இடைக்கால உத்தரவு பெற்றுள்ள வழக்குகளில் தடை உத்தரவுகளை நீக்க கோரி மனுத்தாக்கல் செய்வதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மனுக்களை நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து முடித்துவைக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் வருவாய் மற்றும் தேச நலன் சார்ந்துள்ளதால் இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றமும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, கனிம வளத் துறை தொடர்பான பல்வேறு வழக்குகளில் இடைக்கால உத்தரவை பெற்று பல நிறுவனங்கள் நாட்டின் சொத்துக்களை அபகரித்து வருவது, சட்டவிரோதமாகும் என்றும் எச்சரித்துள்ளார்.