நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 36 பேருடைய வாகனங்கள் சட்டவிரோதமாக மணல், கனிம பொருள்களை கடத்திய குற்றத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது, நாகப்பட்டின மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வாகனங்களை திருப்பி கொடுக்க மறுத்து விட்டது.
இந்த மறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 36 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுவில், "எங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எங்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிப்பர் லாரிகள், பொக்லைகள், டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மழை, வெளியில் உள்ளிட்ட இயற்கை காரணங்களால் பாழுதடைய வாய்ப்புள்ளது.
எனவே வாகனங்களை திருப்பி ஒப்படைக்க உத்தரவிட வேண்டும். விசாரணைக்கு தேவைப்படும்போது, வாகனங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பிலிருந்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டது.