கரோனா என்ற ஒரு சொல் இன்று உலகின் இயக்கத்தையே சற்று மாற்றி அமைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. அதோடு மட்டுமல்லாமல் பலரின் வாழ்க்கையையும் அது புரட்டிப் போட்டுள்ளது.
இந்தியாவையும் விட்டு வைக்காத கரோனா, தேசிய பேரிடர் என அறிவிக்கும் அளவிற்கு தனது கொடுமுகத்தை காட்டி வருகிறது. இதனால் நான்கு மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால் கோடிக்கணக்கான மக்களின் உணவும், இயல்பு வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது.
சிறு தொழிலில் ஈடுபட்டு சுயசார்போடு வாழ்ந்து வந்தவர்களின் எதிர்காலத்தையும் சுக்குநூறாக்கியுள்ளது இக்காலம். வாங்கிய கடனை கட்ட இயலாமலும், கொள்முதல் செய்த பொருள்களை விற்க முடியாமலும் வழியற்று தவிக்கின்றனர் இவர்கள். இதுமட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்களில் மேலாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர் என பல பணிகளில் ஈடுபட்டிருந்த எவருக்கும் இப்போது வேலையில்லை. காரணம் ஊரடங்கு.
வேலையின்மையால் சொந்த ஊர் திரும்பும் வெளிமாநிலத்தவர்கள் சென்னை உள்பட மாநிலம் முழுமையாக உள்ள உணவகங்களின் சமையலர், சப்ளையர், டீ மாஸ்டர் போன்றவர்களும் வீடுகளில் முடங்கியுள்ளனர். சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும், சில உணவகங்கள் மட்டுமே குறைந்த பணியாளர்களுடன் செயல்படுகிறது.
ஒருவேளை ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்பட்டாலும் முன்பைப்போல தங்களுக்கு பணி இருக்குமா என்று ஏங்கி நிற்கின்றனர் உணவகப் பணியாளர்கள். தனியார் வணிக வளாகங்கள், சூப்பர் மார்கெட்டுகள் போன்றவற்றில் பணியாற்றியவர்களின் நிலையும் இதுதான்.
இந்நேரத்தில் சென்னையில் மட்டும் சுமார் எட்டு ஆயிரத்திற்கும் அதிகமான கார், வேன் ஓட்டுநர்கள் வேலை இழந்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருந்தாலும், இவர்களையே நம்பியுள்ள குடும்பத்தினரின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். நகரம், கிராமம் என பாகுபாடின்றி வேலை இழந்தவர்கள் பெரும்பான்மையாகியுள்ளனர்.
பணப் புழக்கம் முறைந்ததால், வாங்கும் சக்தியும் இல்லாமல் போய்விட்டது. இதனால், மக்கள் தங்களுக்கென வீடுகள், கட்டடங்கள் கட்ட முன் வருவதில்லை. விளைவு லட்சக்கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் இடிந்து போய் செய்வதறியாது இருக்கின்றனர்.
வேலை வருமானமின்றி தவிக்கும் கட்டடத் தொழிலாளர்கள் மேலும், மக்களின் மகிழ்ச்சியே விழாக்களில்தான் அடங்கியுள்ளது. ஆனால், அதுபோல ஒரு நிகழ்வு மாநிலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆகிப் போயுள்ளது. திருமணம், திருவிழாக்கள் ஏதுமின்றி களையிழந்துள்ளது மண்டபங்கள், கோயில்கள் மட்டுமல்ல. அதைநம்பியே வாழந்த, இசைக்கலைஞர்கள், கிராமியக் கலைஞர்கள், மேடை நாடக நடிகர்கள் போன்றோரும்தான். இந்த ஊரடங்கால் அடுத்தவேளை உணவிற்கே வழியில்லாமல் இவர்கள் மோசமான ஒரு சூழலில் சிக்கியுள்ளனர்.
வருமானமிழந்து தவிக்கிறோம் - கிராமிய இசைக் கலைஞர்கள் ஆம், கல்லூரி விரிவுரையாளர் முறுக்கு சுடுகிறார். நாடகக் கலைஞர் தோசை விற்கிறார். ஓட்டுநர் நடந்தே சென்று பலூன் விற்கிறார். கரோனா கால கோரத்தை இவற்றைக் கொண்டு எதிர்காலம் புரிந்து கொள்ளும். இப்படியே செல்லும் இதன் போக்கு எப்போது சரியாகும்? நம்மைப்போலவே அரசுகளும் உதட்டை பிதுக்குகின்றன. ஆங்காங்கு கரோனாவிற்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும், இயல்பு வாழ்க்கைக்கு இப்போது சாத்தியமில்லை என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
ஊரடங்கால் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள கடைகள் இக்கொடிய சூழல் மக்களை எவ்வாறெல்லாம் பாதித்திருக்கும், இனிமேலும் பாதிக்கும் என்பது குறித்து உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்து குலைநடுங்கச் செய்கிறது. ’ ஒரு தேசத்தில் வன்முறை, கொலை, கொள்ளை போன்ற நிகழ்வுகள் நடப்பதற்கு வேலையின்மை மற்றும் பொருளாதார பாதிப்புகளே முக்கிய காரணிகளாக இருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இதன் அடுத்தக் கட்டமாக வெறுப்பு, வன்மம், மத, இன, மொழி ரீதியான வன்முறைகள் கூட நிகழலாம் ‘ என எச்சரிக்கின்றனர்.
சரி இதற்கு தீர்வே இல்லையா என்றால், முதலில் நோய் தொற்றை விரைவாக கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அடுத்ததாக மக்கள் இழந்த வேலை உள்ளிட்டவைகளை மீண்டும் பெற துரித ஏற்பாடுகள் செய்ய வேண்டும். குறிப்பாக இருக்கப்பட்டவர்களுக்கு எதிராக இல்லாதவர்கள் கோபமடையும் நிலை ஏற்படுவதற்கு முன், இயல்பு வாழ்க்கை திரும்ப வேண்டும். அப்போதுதான், சீர்கெட்டுக் கிடக்கும் இந்த அவல நிலை சீர்பெறும்.
மிகமோசமான நிலையில் தவிக்கும் ஏதுமற்றோர் இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு: பழைய இரும்புக் கடைக்குச் செல்லும் விசைத்தறிகள்...?