சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் நல்லதம்பி, திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்க அரசு முன்வருமா என்றும், 200 கல்லூரிகளில் பாலகம் அமைக்கப்படும் என்று கடந்த கூட்டத்தொடரில் அமைச்சர் தெரிவித்திருந்ததன் நிலை என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்கக் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஆவின் பாலகம் அமைக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கனவே கூறியிருந்ததைவிட தற்போது 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கோரிக்கையின் அடிப்படையில், கல்லூரி வளாகங்களில் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.