கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் வெளி மாநில தொழிலாளர்கள் பல்வேறு அரசு காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளி மாநில தொழிலாளர்கள் அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள வலைத்தளத்தில் பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, பகுதி பகுதியாக சொந்த ஊருக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை அறிந்த வெளி மாநில தொழிலாளர்கள் பலர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். வலைதளத்தில் பதிவு செய்து பயணம் உறுதி செய்யப்படாத தொழிலாளர்களும் அங்கு வந்ததால் கூட்டம் அலைமோதியது. ரயில் நிலையம் மற்றும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பாக உடைமைகள், கைக்குழந்தைகளுடன் பலர் நின்று கொண்டிருந்தனர். ஆனால், மொழி பிரச்னையால் நிலைமையை அவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் காவல் துறையினர் சிரமம் அடைந்தனர். ஒரு வழியாக இறுதியில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால், சொந்த ஊர் செல்ல ஆவலுடன் வந்த தொழிலாளர்கள் பலர் சோகத்துடன் முகாமுக்கு திரும்பினர்.