கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதனால் பல தரப்பு மக்கள் வருமானம் இன்றி சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாடு முழுவதும் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரிட்டுள்ளது. ஊரடங்கு என்றவுடன் பல தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். அப்படிப் போகும் வழியில் சிலர் உயிரிழந்த அவலமும் நடந்தேறியது. கடந்த ஒரு மாத காலமாக வேலை, வருமானம் இல்லாமல், இங்கேயே தங்கியுள்ள மற்றத் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையை அடுத்த செம்பாக்கம் பகுதியில், 100-க்கும் அதிகமான ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக கடந்த ஐந்தாண்டுகளாகத் தங்கி கட்டட வேலை செய்துவருகின்றனர். தற்போது எந்தப் பணிக்கும் அனுமதி இல்லாததால், சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த சொற்ப பணமும் செலவாகிப்போன நிலையில், உணவுக்குக்கூட வழியின்றி வாழ்வின் பெரும் சவால்களை எதிர்கொண்டுவருகின்றனர்.