சென்னை:மத்திய அரசின் சிறார் நீதி சட்ட விதிகளைப் போல, தமிழ்நாடு சிறார் நீதி சட்ட விதிகளைத் திருத்தக் கோரி, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஸஹிருதின் முகமது என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதில் மத்திய அரசின் சிறார் நீதி சட்டப்படி, 'குழந்தைகள் நலக் குழுத் தலைவர், உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், இயக்குநர் அந்தஸ்துக்குக் குறையாத அலுவலர் ஒருவர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இருவர் உள்பட 7 பேர் கொண்ட குழுவை நியமிக்கக் கூறும் நிலையில், தமிழ்நாடு அரசு விதிகள், மாவட்ட நீதிபதி, ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அடங்கிய குழுவை அமைக்கக் கூறுவது சட்டவிரோதமானது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 'குழந்தைகள் காப்பகங்களை நடத்துவோர் குழுக்களில் இடம் பெறக்கூடாது என மத்திய அரசு விதிகள் வலியுறுத்தும் நிலையில், அவர்களை நியமிக்கத் தமிழ்நாடு விதிகள் அனுமதியளிப்பதால் குழந்தைகள் நலம் பாதிக்கப்படும் என்பதால் இந்த விதிகளை மத்திய அரசு விதிகளுக்கு உடன்பட்டதாகத் திருத்தம் செய்ய வேண்டும்' எனக் கோரியுள்ளார்.