சென்னை:சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக கடந்த 2008ஆம் ஆண்டு விஜயன் நியமிக்கப்பட்டார். இவரின் மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, அதே பல்கலைகழகத்தின் வளாக இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவர் பல்கலைகழக இயக்குநராக நியமிக்கப்பட்ட பிறகும், துணை வேந்தருக்கான வசதிகளை பயன்படுத்தி வந்துள்ளார். இதனால், பல்கலைகழகத்திற்கு 22 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, அந்த தொகையை திருப்பிச் செலுத்த வேண்டும் என பல்கலைக்கழகம் விஜயனுக்கு உத்தரவிட்டது.
சிபிஐ வழக்குப்பதிவு: இதேபோல, இந்திய கடல்சார் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், அவர் பணியாற்றிய இடத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து, அவருக்கு எதிராக துறை ரீதியான விசாரணை நடத்திய கடல்சார் பல்கலைக்கழகம், அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளையும் எதிர்த்து விஜயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.