சென்னை:யானைகள் கொடூரமாக வேட்டையாடப்படுவதால், தேசிய வன விலங்கு குற்றத் தடுப்புப் பிரிவுடன், சிபிஐ இணைந்து யானை வேட்டை தொடர்பான வழக்குகளை விசாரிக்க உத்தரவிடக் கோரி, கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இம்மானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வரும் யானைகள்
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கின் நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அமர்வில் இன்று (டிசம்பர் 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 13 ஆயிரம் வன விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் அஸ்ஸாம், பிகார், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட ஆறு மாநிலங்களில்தான் யானைகள் அதிக அளவில் உள்ளதாகவும், ரயிலில் அடிபட்டு யானைகள் இறக்கும் செய்திகள் சமீபத்தில் வருகின்றன எனவும், இந்தியாவில் 29 ஆயிரம் யானைகள் இருந்த நிலையில், தற்போது அவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாகவும் அதிர்ச்சி தெரிவித்தனர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 61 யானைகளும் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன என்று மத்திய தணிக்கைத் துறை அறிக்கை தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, யானைகள் இறப்பு தொடர்பாகக் குழுக்கள் அமைத்து பரிந்துரைகள் மட்டும் பெறப்படுவதாகவும், அந்தப் பரிந்துரைகள் தாள் அளவில் மட்டும் உள்ளதாகவும் தெரிவித்த நீதிபதிகள், யானைகள் இறப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை என்றும் வேதனை தெரிவித்தனர்.
எவ்வளவு பணம் செலவழித்தாலும் - முழுமையான தீர்வு கிடைக்கவில்லை
ரயில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதற்குப் பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், யானைகள் வழித்தடங்களில் 45 கிலோ மீட்டர் வேகத்தில்தான் ரயில் இயக்கப்படுகிறது என்றும், ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்கினாலும் யானை மீது மோதினால் அவை இறக்கத்தான் செய்யும் என்றும், இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல்செய்வதாகவும் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க உள்ளதாக எச்சரித்த நீதிபதிகள், ரயில்வே சொத்துக்களைப் பாதுகாக்கத் தடுப்புச் சுவர்களை எழுப்புவதால், யானைகள் வேறு வழியில்லாமல் தண்டவாளங்களைக் கடக்கும் சூழல் ஏற்படுவதாகவும், யானை இழப்பைத் தடுக்க எவ்வளவு பணம் செலவழித்தாலும் அதற்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல்செய்ய மத்திய அரசுக்கும், தெற்கு ரயில்வேக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க:மரங்களை வெட்ட இடைக்காலத் தடை