சென்னை:தடை செய்யப்பட்ட அமைப்பான மாவோயிஸ்ட் இயக்கத்தின் சித்தாந்தத்தை சமூக ஊடகத்தில் பரப்பியதாக உபா சட்டம் என அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் மோகன் ராமசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்ககோரி அவர் தொடர்ந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமையின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மோகன் ராமசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் அமர்வு முன்பு நேற்று (அக்.14) நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில், சமூக ஊடகங்களில் செய்திகளை பதிவேற்றுவதால், இந்திய தண்டனைச் சட்ட விதிகள் மற்றும் தேசத் துரோகத்தின் கீழ் உள்ள விதிகள் எதுவும் பொருந்தாது என்றும், உபா பயங்கரவாதச் செயல் என்பது உடல் ரீதியான செயல்களை மட்டுமே குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் வாதிடப்பட்டது.