தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

10ஆம் வகுப்புத் தனித் தேர்வுக்குத் தடையில்லை - உயர் நீதிமன்றம்

MHC refuse to interim stay for exam
MHC refuse to interim stay for exam

By

Published : Sep 20, 2020, 2:50 PM IST

Updated : Sep 20, 2020, 7:47 PM IST

14:45 September 20

சென்னை:கரோனா ஊரடங்கு காரணமாக பத்தாம் வகுப்பு பொதுதேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் தனித் தேர்வர்களுக்கு செப்டம்பர் 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 26 வரை தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.

செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள பத்தாம் வகுப்பு தனித் தேர்வில் பங்கேற்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் தனித்தேர்வர்களுக்கான தேர்வை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இது சம்பந்தமாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து  செய்து, தனித் தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத் திறனாளி மாணவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கக்கோரி திருச்சியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவரின் தந்தை பாலகிருஷ்ணன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனித் தேர்வராக எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், அவர்களுடைய உதவியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனவும், தனிமனித இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மனுதாரர் சார்பில் தாக்கல் செய்த மனு இன்று (செப். 20) நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், கரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளதாகவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படவில்லை எனவும், தனிமனித விலகலை பின்பற்றுவது, முகக்கவசம் அணிவதும் மாற்றுத்திறனாளி மாணவர்களால் சாத்தியமில்லை என்பதால் நாளை (செப்டம்பர் 21) நடைபெறும் தனித் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டுமென வாதிட்டார்.

பள்ளி கல்வித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவுப்படி தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளிகள், அவர்களது உதவியாளர்கள் அனைவருக்கும், அரசு சார்பில் அவர்களது வீடுகளுக்கே சென்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், பரிசோதனை முடிவில் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

தேர்வு அறைகளில் போதிய பாதுகாப்பும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் வசதிக்கேற்ப, அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசு தரப்பு வாதத்தை ஏற்று, நாளை (செப்டம்பர் 21) நடைபெறவுள்ள மாணவர்களுக்கான பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், தனித் தேர்வில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்வை எதிர்கொண்ட விதம்? தேர்வின் போது ஏதேனும் சிரமம் அவர்களுக்கு ஏற்பட்டதா? என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசும், மனுதாரர் தரப்பினரும் எட்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Last Updated : Sep 20, 2020, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details